Saturday, July 22, 2006

தாஜ் கவிதைகள்..4



சரணம்
********
மரமேறி விழுந்தவன் கதையை
கனவில் இடறப் படித்தபோது
கண்களில் உயிர்த்தது ஒளி.
முறிந்த இடங்கள் கூட
சிதைந்தப் பிண்டங்கள்
ஒட்டிக் கொள்ள
கரங்களில்
திரண்டது புஜம்.
உடைப்பட்ட மூக்கு
வடிவெடுத்து விடைக்க
முகத்தில் எழிலலை.
சிராய்ப்புக் கொண்ட மேனியோ
சொல்லொன்னா மினுமினுப்பு.
சித்தம் பேதலித்த சிரசுக்கு
அதிகார அதிஸ்டம் வேறு.
பட்டத்து யானை
மாலையேடு வலம் வர,
கோட்டை மாடத்துச் சாளரத்தில்
சிறகடிக்கும் மணிப்புறாக்கள்.
பணிப் பெண்களின்
சாமர மேவலில்
இடைவாள் பளபளக்க,
படுக்கை விதியாகிப் போன
மூட்டைகளின் நமைச்சல்
இன்றைக்கும் பழிதீர்த்தது.
***
கணையாழி/மார்ச்/1999

படம்.
*****
அம்மா எனக்கு நேர்
வகிடெடுத்து சிங்காரித்த
குழந்தைப் படம்.

உச்சி முகர்ந்த தந்தையுடன்
விழி பிதுங்கும் குண்டுப்
பையன் படம்.

பல்லெல்லாம் போனயென்
பாட்டியோடு
வாய்விட்டு சிரிக்கக் காட்டும்
அரும்பு மீசை படம்.

சம்பாத்திய மிடுக்கும்
பச்சை ஜொலிப்புமாய்
என்னவளோடு மகிழும் படம்'

ஈன்ற மழைகளிடம்
முத்துக்கள் சிந்தியப்
பதிவுகளையும் சேர்க்க
வண்ணமென ஒருபாடு
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
இன்றைய அழகைத் தவிர.

***
E-mail: tamilpukkal@gmail.com

No comments: