கோலம்
-----------
மையத்தில் ஒற்றைப் பட்ஷி
சிறகசைத்துப் பறக்க
புள்ளிகளை அளந்து
வரிசைக் கிரமமாக வைத்தேன்.
ஒவ்வொன்றாய்ப் பற்றி
வரைதலைத் தொடங்கவும்
கற்ற கோலம் கை கொடுக்க
இட்ட கோலத்தை முன்னெடுத்தேன்.
உச்சத்தில் அன்னியமென விட்ட
இறைச் சுழி வேண்டுமென்றார்கள்
மையத்தில் மணையிட்டு
ஜோடிக் கிளியாய்க்
காணணுமென சொன்னார்கள்.
என் கோலம் பெரிதாகிப் போனது
ஜோடிக்கு உயிர்ப்பாய்
குஞ்சுகளையும் வரைந்தேன்.
ஒவ்வொரு வளைவுகளிலும்
அழகின் அர்த்தம் கண்ணுர
எட்டெடுத்து வைத்ததில்
எங்கோ பிசகி
வட்ட வட்டப் பின்னலாய்
கால்போன திசைக்கும் விரிந்தது.
எந்த திசையில் நின்று பார்த்தாலும்
என் கோலம் எனக்கே புரியவில்லை.
***
- கணையாழி. மார்ச்/1997
வேஷம்.
-----------
என்னைக்
கழட்டி வைத்தேன்
அரிதாரம் கொள்ள முழு
வேஷத்திற்குப் பின்
மாறிவிட்டேன்.
மேடை
பிரவேஷத்தில்
கரவோலி.
கண்கள் பூக்க
மலர்ந்த மக்கள்
மீண்டும் மீண்டும்
எதிர்பார்ப்பில்.
எல்லாம் கலைந்து
எனக்குள் என்னை
நுழைத்துக் கொள்ள
சாதாரணனானேன்.
***
- தமிழ் நேசன்/மலேசியா/
ஜனவரி/1997
- தாஜ்
No comments:
Post a Comment