Tuesday, June 09, 2009

தேர்தல்-2009: சோவின் துக்ளக் அரசியல்!



தேர்தல்-2009:
சோவின் துக்ளக் அரசியல்!
------------------------------------
*
(நண்பரோடு பகிர்தல்)
*
- தாஜ்

*
அன்புடன்
ஆபிதீன்....
*
எனது கம்பியூட்டர்
திடுமென முடங்கி விட
இண்டர்நெட்....
இருகச் சாத்திக் கொண்டது!
தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்...
கிளிக் செய்ய நினைத்த
இந்த மெயில் தாமதம்.... தாமதமென
மஹா தாமதத்துடன்
இப்போது!
*
கடைசிக் கட்ட
வாக்கு பதிவு ஆகிவிட்டது.
அறுபத்தியேழு சதவீதத்திற்கும் மேல்!
புள்ளி விபரம் அசர அடிக்கிறது!
தமிழகம்...
ரொம்பவுதான் சுதாரிப்பு!!
சரி...
கெலிக்கப் போவது யார்?
அம்மாவா? அய்யாவா?
நிதர்சனம் நாளை!
*
என்னை மாதிரி ஜென்மங்களுக்கு
அம்மாவும் அய்யாவும் ஒன்றுதான்!
பொதுவாய்...
அரசியல் = எட்டிக்காய்!
சரியாகச் சொன்னால்...
'எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே முகம்!'
இந்த நிஜத்தை
தெள்ளத் தெளிந்து
காலங்கள் ஆகிறது... ஒருபாடு!
துக்ளக் ஆசிரியர் சோ
என்றோ....
போதித்த நிரூபணம் அது!
*
துக்ளக் இதழின்
நீண்ட கால வாசகனாக
இருந்த/ இருப்பதில்
பெற்ற சில பேறுகளில்
இதுவும் ஒன்று!
இந்த... நிதர்சணத்தை/
மறுக்க முடியாத நிஜத்தை
அதன் ஆசிரியர் மறந்து போனார்!
அதுதான் சோகம்!
*
இந்த பாரளுமன்ற தேர்தல்-2009ல்
துக்ளக் சோ
தனது பத்திரிகையின் வழியே...
அண்ணா தி.மு.க.வின்
மறைமுக
தேர்தல் பணிக்குழு தலைவராக/
துல்லியமாகவெனில்...
அக்கட்சியின் ராஜகுருவாக
அவர் இயங்குகிற
செயல்பாடுகள்
கவனத்திற்குறியது!
*
இந்தத் தேர்தலுக்கான...
அ.தி.மு.க.வின்
தேர்தல் கள முனைப்பைக் கூட
சோதான் தொடக்கி வைத்தார்!
15.01.2009ல் நடந்தேறிய
துக்ளக் ஆண்டு விழாவில்
இதழின் மஹாத்மிய கூப்பாடுகளோடு.....
அந்தத் தொடக்கத்தையும்
சிறப்பாகவே முடுக்கிவிட்டார்!
*
திருமயம் தொகுதி சட்டசபை
இடைத்தேர்தலில்
அனைத்து கட்சிகள் புடைசூழ
மெகா கூட்டணியோடு
களம் இறங்கி தோல்வியுற்ற
அண்ணா தி.மு.க.விற்கு
ஆருதல் வழங்கும் பொருட்டும்/
பொதுத் தேர்தலுக்கு
அந்தக் கட்சியை
தயார்படுத்தும் நோக்கிலும்
துக்ளக் சோ 'ஊக்கு'வித்த
'பேருரையை!'
சட்லைட் வழியே...
உலகமே பார்க்க
ஜெயா டி.வி.
திரும்பத் திரும்ப
நாட்கணக்கில் ஒளிப்பரப்பி
மகிழ்ந்தது!
*
இங்கே....
துக்ளக் சோ குறித்த
வாழும் என் ஆதங்கங்களோடு
அறிமுகப் புள்ளிகளை இட்டுக்
கோலம் கிறுக்கியிருக்கிறேன்!
தள்ளி நின்றுப் பார்த்தால்...
இதன் சாயல்கள்
சில ரூபங்களை காட்டும்!
*
ஆபிதீன்...
இந்தச் சாயல்களும் ரூபங்களும்
உங்களுக்கு புதிதாக
எதனையும் சொல்லிவிடப் போவதில்லை!
துக்ளக் சோ
எனக்கு எத்தனை பழமையானவரோ...
அத்தனைக்கத்தனை உங்களுக்கும்!
என் கல்லூரிக் காலத்தில்
நான் அவருக்கு கொடிப் பிடித்த மாதிரி
நீங்கள் கூட உணர்ச்சி வசப்பட்டிருக்கலாம்!
*
தமிழக அரசியல் வானில்
சோவின் ராஜ்ஜியம் விசேசமானது!
கற்றறிந்த தமிழர்களின் பார்வையில்...
அந்த ராஜ்ஜியம்
எப்பவும் ஈர்ப்புடையது!
அரசியலை முன் வைத்து
நேரிடையாக/ எதிர் மறையாக
ஈர்ப்பு செய்யும் ராஜ்ஜியமாக
அது இருப்பதில்
எல்லோருக்கும் அதன்மீது
மாறா கவர்ச்சி!
அரசியலும்/ சினிமாவும்
தமிழனின்
இரண்டு கண்கள் என்பதுதான்
எத்தனை நிஜம்!
*
துக்ளக் சோவிடம்
கேள்வி எழுப்பும்/
இதழை ஆய்வுக்கு உட்படுத்தும்
விமர்சகர்கள் இங்கே குறைவு.
இல்லையென்றே சொல்லிவிடலாம்!
தமிழக அரசியல்வாதிகளும்
சக பத்திரிகையாளர்களும் கூட
அந்த ராஜ்ஜியத்தை
கடக்கும் தருணம்....
பவ்விய மௌனத்தோடு
நடந்து கொள்வதைப் பார்க்க
வியப்பாகத்தான் இருக்கும்!
ஏன் அந்த மௌனம்?
ஏன் ஏன் அந்த பவ்வியம்?
புரியவில்லை!
விளங்காத எத்தனையோ
வாழும் புதிர்களில்
இதையும் சேர்த்துவிடலாம்!
*
இத்தனைக்கும்...
அந்த ராஜ்ஜிய அதிபதி
வெளிப்படையான
அரசியல்வாதி அல்ல!
வெறும் பத்திரிகையாளர்!
இதழ் ஆசிரியர்!
அவ்வளவுதான்!
மற்றபடிக்கு..
நடிகர்/ நாடகக்காரர்
என்பதெல்லாம்
இங்கே அன்னியம்!
*
பத்திரிகையாளர்!
இதழ் ஆசிரியர் !
என்பதாக மட்டும்
சொல்லிக் கொள்ளவே...
சோவும் விரும்புபவார்!
ஆனால்...
அரசியல் சதுரங்கம் ஆட
அநியாயத்திற்கு ஆர்வமும் கொள்வார்!
*
"நீங்கள் அரசியல்வாதியா?"
துக்ளக் சோவிடம்
இந்தக் கேள்வியை
யாரும் கேட்டுவிட முடியாது!
அவரிடம் எப்பவும்
விசேச பதில் அதற்கென்றே
கனிந்துக் கொண்டேயிருக்கும்!
அப்படிக் கேட்டு
புகைந்து கறுத்தவர்களை அறிய
பரிதாபமாக இருக்கும்!
இத்தனைக்கும்...
அவர்...
பி.ஜே.பி.யின் பாராளுமன்ற
மேல்சபைக்கான எம்.பி.!
என்பது இங்கே துணைச் செய்தி!
*
அவரது பத்திரிகையின்
அத்தனைப் பக்கங்களின்
அனைத்து வரிகளும்
பி.ஜே.பி.யைத் தூக்கிப் பிடிப்பது!
வாரம் தவறாமல்
வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும்
வரிகளவை யென்பது...
இன்னொரு துணைச் செய்தி!
இதையெல்லாம் சுட்டி
கறுத்தவர்கள் திரும்பவும்
கேட்பார்களெனில்....
"உண்மையின் பக்கம்
தான் நிற்பதிலும்...
வரிந்துகட்டிக் கொண்டு
அப்படித் திரிவதிலும்...
தவறில்லை" என்பார்!
*
"உண்மைக்கும் அரசியல் கட்சிகளும்
என்ன சம்பந்தம் இருக்க முடியும்?"
எனகேட்பவர்கள்
விடாகண்டனானால்....
பெரிய தவறு கொண்ட கட்சிகள்/
சிறிய தவறு கொண்ட கட்சிகள் யென
வியாக்கியானத்திற்குத் தாவிவிடுவார்!
*
துக்ளக் சோவை
அவர் போக்கில்
விட்டுவிடுவதென்பது நல்லது!
குறைந்தப் பட்சம்
இப்படி கேள்வி கேட்பவர்களின்
மண்டைக் காய்வது மிஞ்சும்!
இதனால் எல்லாம்
அவரது அந்தஸ்த்து
ஒரு நாளும் மங்கியதே இல்லை!
*
துக்ளக் இதழில்
சோ எழுதி வந்த/ வருகிற
அரசியல் விமர்சனங்களே...
அவருக்கு...
அப்படியோர்
அளவிட முடியாத அந்தஸ்த்தைத்
தேடி கொடுத்திருக்கிறது!
மங்காதும் காக்கிறது!
தவிர...
மறைமுக/ நேரடி யென
அவர் ஈடுப்பாடு கொள்ளும்
அரசியல் தரவுகள்/
அதையொட்டிய நடவடிக்கைகள்
அவரது ராஜ்ஜியத்தை
மேலுமாக விரிவாக்கம் செய்கிறது!
*
துக்ளக் சோ...
விசேசமானவர் மட்டுமல்ல...
வினோதமான மனிதரும் கூட!
சாராசரிகளுக்கு மேல்!
அறிவு ஜீவிகளையும் தாண்டிய உயரம்!
அவ்வப்போது....
அவரிடம் தெறிக்கும்
மேதவித் தனங்களே சான்று!
அதுதான் லேண்ட் மார்க்!
அந்த ராஜ்ஜியத்தின்
நிரந்தர அடையாளம்!
*
பெண்கள் சுதந்திரம்...
பிறந்த நாள் கொண்டாட்டம்..
நியூ இயர்/ மதர்ஸ் டே/ பேரண்(ட்)ஸ் டே
வாலண்ட்ரி டே... நோ! நோ! நோ!
எதுவும் ஆகாது சோவுக்கு!
பொறுக்க முடியாத அவசர அவசித்தில்....
அவரிடம்....
"ஏன் அப்படி?"
கேட்டீர்கள் என்றால்...
சீறுவார்!
அப்படி சீறுவதற்கும்
அவரிடம் விதவிதமான
தர்க்கங்கள்
சுளை சுளையாய் இருக்கும்!
*
அவரின்...
அந்தச் சுளைகளானத்
தர்க்கங்களை
அதிமேதவி தனத்தின்
வெளிப்பாடென்பார்கள் சகாக்கள்!
சுருக்கென தைக்கும் எனக்கு.
அவர்களை மறுக்க நினைப்பேன்.
எப்படி? விளங்காது!
*
துக்ளக் சோ...
தனது இதழ் முகவரியில்...
மௌண்ட் ரோட்டிற்கு பதிலாக
'அண்ணா சாலை' யென
எழுத வேண்டி வந்த
மாற்றம் நேர்ந்த போது....
ரொம்ப ஆண்டுகள்
மாற்றங்களோடு சகஜம் பாராட்டாமல்
மௌண்ட் ரோடு என்றே
எழுதி வந்தார்!
காலம் கடந்து...
யதார்த்த போக்கிற்கு தலையாட்டினார்!
*
கலைஞரை...
கருணாநிதியென்று எழுதிவந்து
பின்னொரு சமயம்
கலைஞருக்கு மாறினார்!
*
எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டுவந்த
தந்தை பெரியாரின்
தமிழ்ச் சீர்திருத்த எழுத்தை
எல்லா பத்திரிக்கைகளும்
சபையேற்றிக் கொண்டபோதும்
அவர் அசைந்துக் கொடுக்கவில்லை!
ஒரு நாள் ஒரு பொழுது
துக்ளக் இதழிழும்
பெரியாரின் சீர்த்தம் சபையேறியது!
*
பத்திரிகைகள் எல்லாம்
கம்பியூட்டர் யுகத்தில்
காலடி வைத்த போது...
தர்க்கங்களினால் அதை மறுத்தார்!
பின்னர்...
இதுவும் வழக்க மாதிரியே!
*
புதுக் கவிதையை
காம்பாசிட்டர் கவிதையென
ஒரு கால கட்டத்தில்
தீர வாதம் செய்த அவர்
பின்னொரு காலத்தில்
முடக்கிப் போனார்!
பின்னர்...
அந்தப் பக்கம்மூச்சும் காட்டுவதில்லை!
*
இத்தனை நழுவல்கள்/
சறுக்கல்கள் கொண்ட அவரை
'அதிமேதாவி' என்கிறார்கள் சகாக்கள்!
சோவின் மீதான ப்ரியத்தில்
அவர்களை நான்
மறுக்க நினைப்பதெல்லாம் சரி...
எதை சொல்லி? எப்படி நான்?
*
துக்ளக் இதழின்...
வாரம் தவறாத
அரசியல் விமர்சனங்கள்/
நையாண்டி கட்டுரைகள்/
கேள்வி பதில்கள்/
அரசியல் நடப்பு பற்றிய
கேலியான சித்திரங்கள்/
என்பன வழியே...
எல்லா முனைகளிலும்
திராவிட-தமிழின எதிர்ப்பை
தாராளமாய் வாரியிறைத்து
தன்னை நிலைநிறுத்திக் கொள்கிற
அவரது அடிப்படை சித்தாந்தம்
அடுத்தவர்களுக்கு எளிதில் விளங்காது!
*
எல்லோரையும் ஓர் பொன்னுலகுக்கு
இட்டுச் செல்லும் முயற்சிகளாக
அதனை அவர்
நமக்கு நியாயப்படுத்துபவர்!
*
'துக்ளக்' சோ....
தன்னை வருத்திக் கொண்டு
நம்மையும் படுத்தி
இட்டுச் சென்று காமிக்க முயற்சிக்கும்
அந்தப் பொன்னுலகு என்பது....
திராவிட கட்சிகளின் அழிவில்
காணக் கிடைக்கும்
நிசப்த பூமியைத்தான்!
*
அந்த அழிவின்
நிசப்தத்திற்கு இடையே...
அஸ்திவாரம் பறித்து
இஸ்டமான
தேசிய கட்சி ஒன்றின் ஆட்சியை
தமிழ் மண்ணில்...
கட்டி எழுப்ப துடியாய் துடிப்பவர் அவர்!
அவரது...
இந்த 'உடோபியன்' ஆசை கொண்ட செயல்...
அவர் காமிக்க நினைக்கும்
அந்தப் பொன்னுலகின்
இன்னொருப் பக்கம்!
*
அவரின் அவாவை
இந்த மக்கள்தான்
புரிந்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்!
அடம்பிடித்து
திரும்பத் திரும்ப
திராவிடக் கட்சிகளிடமே
சரணடைந்து விடுகிறார்கள்!
அவர்தான் என்ன செய்வார்?
என்னென்னவோ செய்கிறார்
பிடிக்காததுகளையும் சேர்த்து.
*
துக்ளக் தொடங்கப்பட்ட நாளிலேயே....
சங்கிலித் தொடராய்
டெல்லி வரை அவருக்கு
நீண்டு கிடக்கிற
தொப்புள்கொடி உறவுகளின்
வலுவான பளுக் கொண்டும்
தனது வாதத் திறமை கொண்டும்
திராவிட முன்னேற்றக் கழகத்தை
துடைத்தெடுத்து
கண்ணுக்கெட்டாத தூரத்தில்
கடாசிவிட நினைத்தார்!
*
என்றைக்குமே...
நினைப்பும் நடப்பும்
மண்ணில் வேறு வேறாக இருப்பதுதான்
வாழும் யதார்த்தமாக இருக்கிறது!
அல்லது சாபமாக!
*
துக்ளக் சோ....
முனைப்பாய் எழுத/ செயல்பட
துவங்கியப் பிறகுதான்...
திராவிட முன்னேற்றக் கழகம்
குட்டிப் போட்டது!
திராவிட முன்னேற்றக் கழத்தின் நம்பர்-2
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
நாளொரு மேனி...
பொழுதொரு வண்ணம்
அவரது கண் பார்க்கவே
வளர்ந்து ஜமாத்தது/
ஜமாய்த்தப்படிக்கும் இருக்கிறது!
*
மேதமை/ யுக்தி/ அரசியல் சாணக்கியம்
என்பது....
அனைவருக்கும் பொதுவென
திராவிட இயக்கம்
அழுத்தமாக நிரூபித்த
இன்னொரு சான்றாக
அண்ணா தி.மு.க. வின் உதயத்தை
ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்!
*
துக்ளக் சோ
விட்டாரில்லை!
இரண்டையும் வலுவாகவே எதிர்த்தார்!
அந்த இரண்டு கட்சிகளும்
இவரை பஃபூன் என
கண்டு கொள்ளாது
புறம் தள்ளியபடிக்கு....
தமிழக ஆட்சி அதிகாரத்தை
மாறி மாறி....காலத்திற்கும்
கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது!
*
இரண்டு திராவிட கட்சிகளும்!
இன்றுவரை...
தேசிய கட்சிகள் எதனையும்
ஆட்சிக் காமத்தோடு
தமிழ் எல்லைக்குள்
நுழைய விட்டதில்லை.
வேண்டுமானால்...
கொஞ்சத்திற்கு சீட்டுகள்!
அந்த மடத்தில் தாராளமாய்...
வேண்டுமானால்....
கனவுகளோடு அர்கள்
தூங்கியெழுந்து போகலாம்...
சம்மதம்!
*
தேசிய கட்சிகளை
தமிழக பீடத்தில் அமர்த்தவும்
கீர்த்திகளை காட்டவும்
ஆயத்தப்பட்ட துக்ளக் சோவின்
கூக்குரலுக்கும் ஆர்பாட்டத்திற்கும்
அன்றைக்கே...
விழுந்துவிட்டது
இரட்டைத் தாழ்ப்பாள்!
*
துக்ளக் சோ...
தனது அடுத்தக் கட்டசெயல்பாடாய்
தென் இந்திய/
வட இந்திய தலைவர்கள் பலருடன்
நெருக்கம் காண்பித்தார்!
மொராஜி/ சந்திர சேகர்/ வி.பி.சிங்/ ஹெக்டே/வாஜ்பாய்/ அத்வானி/
மேலும்....
அவரது சமீபத்திய
வசீகரப்பான 'குஜராத் மோடி'யையும் சேர்த்து
அந்தப் பட்டியல் நீளமானது!
*
அந்தத் தலவர்கள்
டெல்லியில் ஆட்சி அமைக்க
தென்னிந்திய பவர் ஏஜண்டாக
பொறுப்பாய் செயல்பட்டார்
அதை பெருமையாகவும் கருதினார்!
தேசிய கட்சிகளுக்கும்
திராவிட கட்சிகளுக்கும்
ஐந்து வருடத்திற்கு ஒரு முறையோ
அல்லது...
தேவைப் படும் தருணங்களிலோ
பாலம் போடும் பணியை
சிரத்தையாகவே செய்வார்!
அதனை...
தேசிய சேவையாகவே
அவர் கருதுகிறார் என்பதும் மிகையல்ல!
*
ஒரு காலகட்டத்தில்
வாஜிபாய் அரசுக்கு ஆதவாக
அண்ணா தி.மு.க. எம்.பி.களை திரட்டி
சோ ஆற்றிய தேசிய பணி...
அந்தப் பாலம் போடும் வேலை...
இந்தியாவே பார்க்க
ஓர் சுபமுகுர்த்த தினத்தன்று
தடதடத்து விரிசல் கண்டது!
அப்படி... தடதடத்த விரிசலில்...
சோ ஆடித்தான் போனார்!
*
அன்றைக்கு...
ஏதோ ஞாபகத்தில்...
திடுமென ஜெயலலிதாவுக்கு
பிரதமர் பதவியின் மீது ஆசை!
அது வெடித்து துளிர்த்த கணம்
தடதடப்பும் விரிசலும்
தவிர்க்க முடியாமல் போனது!
*
'எல்லாம் எனக்குத் தெரியும்'
சுப்ரமணிய சுவாமியின்
அறிவுரைப் படிக்கு...
அண்ணா தி.மு.க.வின்
தலைவி ஜெயலலிதா
டெல்லியில்...
'டீ பார்ட்டி' களத்தில்
கால் வைத்து இறங்கினார்!
*
தனது 22 எம்.பி.களை
பணயம் வைத்து
நாட்கணக்கில் தாம்தூம் நிகழ்த்தி
தேசிய நஷ்டத்தையும்
கணக்கில் கொள்ளாது
வாஜிபாயின் அரசை கவிழ்த்தார்!
தனது எம்.பி.களை
தாரைவார்த்து
மற்றொரு பொதுத் தேர்தலுக்கு
வழி வகுத்தவராக...
சிங்காரச் சென்னைக்கு
திரும்பினார்... ஜெயலலிதா!
(அந்த தேசிய நஷ்டம்...
அன்றைய கணக்குப்படிக்கு
சுமார் ஐயாயிரம் கோடி ரூபாய்!
தவிர...
அதைத் தொடர்ந்து நடந்த
பாராளுமன்ற பொதுத் தேர்தலில்
ஜெயலலிதாவின் கட்சிக்கு...
'சைபர்' எம்.பி.கள்!)
*
இன்றைக்கு...
துக்ளக் சோ
அதே அந்த 'டீ பார்ட்டி' புகழ்
ஜெயலலிதாவை
மெச்சுகிற மெச்சல்களும்/
உறுதியான நடவடிக்கைகளுக்கு
சொந்தக்காரரென
ஜெயலலிதாவை
தூக்கி நிறுத்தும் முயற்சிகளும்
சராசரி முளையுள்ள எவனையும்
குழப்பும்!
*
அரசியல்வாதிகள்தான்
நேற்றை மறந்தவர்களாக/
மக்களின் மறதியை
பயன்படுத்திக் கொள்பவர்களாக
இருக்கிறார்கள் என்றால்...
துக்ளக் சோவுமா?
*
ஜெயலலிதாவுக்கே
எல்லோரும் ஓட்டுப் போடனும்
தவறி ஒரு ஓட்டுக்கூட
புறண்டுவிடக் கூடாதென்றெல்லாம்....
எண்ணோ எண்ணென்று
என்னென்னவோ எண்ணுகிறார்!
நம்மிடம் புலம்பியும் தீர்க்கிறார்!
*
துக்ளக் சோ
காலம் காலமாக
பொத்திப் பொத்திக் காத்துவரும்
விடுதலைப் புலிகளுக்கெதிரான
கருத்துகளை
மேடைகளில் இன்றைக்கு...
ஜெயலலிதா
மறுத்து பேசுகிறபோதும் கூட...
அவருக்கே
ஓட்டுப் போடுகள் என்கிறார் சோ!
புரியவில்லை!
நெருடல்கள்....
புரியவிட மாட்டேன் என்கிறது.
*
"புலிகளை ஆதரித்துப் பேசும்
அந்தப் பேச்சுக்கு சொந்தக்காரராக
கருணாநிதி இருந்திருக்கும் பட்சம்...
சோவின் கத்தலில்
வானமே விண்டிருக்கும்!" என
நக்கல் அடிக்கிறார்கள் சகாக்கள்!
நான் என்ன செய்ய?
*
விஜயகாந்த்/
தமிழக பாரதிய ஜனதா
என்று யாரும்
ஜெயலலிதாவின் வெற்றிக்கு
குறுக்கே நிற்க கூடாதென பதறுகிறார்!
அவர்கள் நின்றாலும்
வாக்காளர்கள் அவர்களுக்கு
வாக்களிக்கக் கூடாதெனவும்
அப்படி போடுகிற வாக்கு
ஜெயலலிதாவின் வெற்றியைப்
பாதித்துவிடுமெனவும் பதறுகிறார்!
அதையே... திரும்பத் திரும்ப
நிர்பந்திக்கவும் நிர்பந்திக்கிறார்!
*
"துக்ளக் இதழின்
வாசகர்கள் அத்தனை பேர்களும்
ஜெயலலிதாவுக்கே ஓட்டு போடுவதாக
இவரிடம் சொன்னார்களா என்ன?
பின்னர் ஏன்...
நமக்கிந்தப் பயிற்றுவிப்பு?
இனாமாக அல்லவா கிடைக்கிறது புத்திமதி!
தவிர...
வாசகன் என்ன புத்தியை கழட்டி
ஹன்கேரில் மாட்டிவிட்டா
துக்ளக் வாசிக்கிறான்?"
சகாக்கள்....
கேட்காமல் இருப்பார்களா?
*
"தேர்தலில்....
தடங்களே இல்லாத
வெட்டவெளி வேண்டுமென
துக்ளக் சோ நினைப்பதும்தான்....
என்ன மாதிரியான தேர்தல் ஜனநாயகம்?"
தொடர்ந்து கேட்பார்கள் சகாக்கள்!
கேட்கத்தானே...
செய்வார்கள்!
*
துக்ளக் சோ...
ஒரு பிறவி மேதை..!
மஹா பெரிசு!
எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும்.
சகாக்களின் கிண்டலும் கிடக்கட்டும்.
இங்கே....
என் கேள்வி எளிதானது.
அதற்கு பதில் கிடைத்தால் போதும்!
*
காசு கொடுத்து
இதழ் வாங்கி
வாசிக்கும் வாசகனுக்கும்/
அதன் ஆசிரியனுக்குமான
தொடர்பு எந்த அளவிலானது?
*
வாசகனுக்கும்
அறிவு இருக்கும் என எண்ணும்
எந்த பத்திரிகை ஆசிரியனும்
தன் கருத்தை வாசகனின்
மேலேற்ற ஒப்ப மாட்டான்.
நாகரீகம் என்பது
எல்லா மட்டத்திலும் உண்டுதானே!
*
எந்த இதழ் ஆசிரியனும்
தனது கருத்தை
வேண்டுமானால்...
தலையங்கமாக சொல்வான்.
அந்த அளவில் வாசகனை விட்டும் விடுவான்.
இங்கே...
துக்ளக் சோ
ஒரு காலமும் அப்படி நடந்தவரில்லை!
வாசகனின் மேல்
இரக்கமே இருந்ததில்லை!
*
வாசகனுக்கும் அறிவிருக்குமென
துக்ளக் சோ
ஒரு காலமும் யோசித்ததே இல்லை!
இவரது கருத்திற்காக வாசகன்
கையேந்தி நிற்பதாக நினைப்பு அவருக்கு!
நாம் காசு கொடுத்து
அவரது புத்தகத்தை வாங்குகிறோம்
என்கிற நிதர்சணம்
அவருக்குப் பிடிபடுவதேயில்லை!
யோசிக்கவும் அருவருப்பாக இருக்கிறது.
*
கணிப்பில் துக்ளக்கைவிட
பல படிகள் கீழே வைத்துப் பார்க்கப்படும்
நக்கீரன் இதழ்கூட.....
செய்திகளின் உண்மைகள் என்று
அப்படி இப்படியாக
அதற்கே உரிய விசேச நடைகளில்
ஏதேதோ எழுதி...
கருணாநிதியின் பக்கம்
தனது ஆள்காட்டி விரலைக்
காட்டுவதேடு சரி!
வாசகனை அந்தப் பக்கத்திற்கு
உந்தி தள்ளுகிற 'துக்ளக்' வேலையெல்லாம்
அதற்கு கிடையாது.
*
நாளை அவருக்கு
கம்யூனிஸ்டுகளையும்
பிடித்துப் போகுமெனில்
எந்த லாஜிக்கும் உறுத்தாமல்
நம்மை அந்தப் பக்கம்
நெட்டியைப் பிடித்து தள்ளிக் கொண்டு போவார்
அதைச் சரியென்பார்!
இன்னும் மேலே போய்
உங்களுக்கு ஒன்றும் புரியாது....
நான் சொல்லுவதை கேட்டு
கம்யூனிஸ்டுகளுக்கு
ஓட்டுப் போடுங்கள் என்பார்!
*
இப்போது....
அவர் மேலும் ஒன்றை
தெளிவுப்படுத்துவது
பெரிய புண்ணியமாகப் போகும்.
*
அவர் எந்தவகை பத்திரிகையாளர்?
அரசியல் கட்சி
சாரா.... பத்திரிகையாளரா?
சார்ந்த..... பத்திரிகையாளரா?
நூல் அளவே கனமுள்ள
இந்த கேள்வியையும்
அவர் தெளிவு படுத்த வேண்டும்!
*
நிஜம் விளங்காமல்...
உறுத்தும் கேள்விகளோடு
நேர்மை... நேர்மையென
காலா காலமும்
துக்ளக் சோவை
வாசித்தும்தான் என்ன செய்ய?
*
"அது என்ன சிதம்பர ரகசியமா?"
சகாக்கள்....
சிரித்துக் கேலி செய்யக் கூடும்!
தெரியும்!
அது....
ஒன்றுமில்லை என்றும் தெரியும்!
*** *** **
satajdeen@gmail.com

1 comment:

badrkalam.blogspot.com said...

http://www.badrkalam.blogspot.com